அரபிக்கடலில் உருவான மஹா புயல் அதிதீவிர புயலாக மாறியது; மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் அதிதீவிர புயலாக மஹா புயல் மாறிய நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2019-11-04 04:39 GMT
புதுடெல்லி,

அரபிக்கடலில் கியார் புயல் உருவான நிலையில் இரண்டாவதாக மஹா புயல் உருவானது.  அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 30ந்தேதி மஹா புயலாக மாறியது.

இதனால் காற்றின் வேகம் 120 கி.மீட்டர் வரை இருக்கும் எனவும் நவம்பர் 4-ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்த புயல் தீவிர புயலாக மாறியது.  இதன்பின்பு அதிதீவிர புயலாக இன்று மாறியுள்ளது.  குஜராத்தின் வெராவல் பகுதியில் இருந்து மேற்கு தென்மேற்கே 600 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது.  இந்த புயல் திசைமாறி குஜராத் நோக்கி 5ந்தேதி நகர்ந்து செல்ல இருக்கிறது.

இதன்பின்னர் தீவிர புயலாக வலு குறைந்து டையூ மற்றும் துவாரகா பகுதிகளுக்கு இடையே 6ந்தேதி இரவு கரையை கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தீவிர புயலால் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வரை காற்று வீச கூடும் என்றும் திசைமாறும் புயலால் கொங்கன் மற்றும் வடமத்திய மராட்டியத்தில் கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.  இதனை முன்னிட்டு கடல் சீற்றமுடன் காணப்படும்.  அதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்