தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Update: 2019-11-04 23:47 GMT
சென்னை, 

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி, மாதம் இறுதி வரை தமிழகத்தில் பரவலாக பெய்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழையின் அளவு சற்று குறைவாக காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தாய்லாந்து அருகே உருவான மேலடுக்கு சுழற்சி, அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டு இருக்கிறது என்றும், தமிழகத்துக்கு வெப்ப சலனத்தால் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 3 தினங்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 2 தினங்களுக்கு (இன்றும், நாளையும்) வெப்பசலனம் காரணமாக தென்மாவட்டங்களான ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 5-ந்தேதி (இன்று) அந்தமான் கடல் பகுதிகளிலும், 6, 7, 8 ஆகிய 3 நாட்களுக்கு மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மேற்சொன்ன நாட்களில் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், சூலூர், ராஜபாளையம் தலா 6 செ.மீ., பீளமேடு, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 5 செ.மீ., சிவகாசி, பாளையங்கோட்டை, கோவை, கடலாடி தலா 3 செ.மீ., புள்ளம்பாடி, நீடாமங்கலம், சங்கரன்கோவில், அவினாசி, பாம்பன், குடவாசல், திருமங்லம், தாராபுரம், காமாட்சிபுரம், லால்குடி தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

சென்னையிலும் காற்று மாசு பாதிப்பா?

டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அதே சூழல் சென்னையிலும் தென்படுவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

நம்முடைய வெப்பநிலை 26 டிகிரி என்ற நிலையிலும், காற்றின் ஈரப்பதம் அதிகமாகவும் இருக்கிறது. மேலும் சென்னையில் வாகன போக்குவரத்து மற்றும் தேவையற்ற பொருட்களை எரிப்பதன் மூலம் வரும் புகை, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. இதனால் அதன் தன்மை மாறிவிடுகிறது. இதற்கு ‘ஸ்மாக்’ என்று பெயர்.

கடலில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று நமக்கு உள்ளே வருகிறது. அந்த சமயத்தில் காற்றும், வெப்பநிலையும் அதிகமாக இல்லாததால், நம்முடைய நிலப்பரப்பில் இருக்கும் புகையுடன் கலந்துவிடுகிறது. ஆகவே நமக்கு புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. வெயில் அதிகமானதும் அது கலைந்து விடும். டெல்லியில் இருக்கும் காற்று மாசுவுக்கும், இங்கு இருக்கும் நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்