ஊதிய உயர்வுக்காக போராட்டம்: டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு தடை; ஐகோர்ட்டு உத்தரவு

ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்திய டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2019-11-08 23:08 GMT
சென்னை, 

சேலத்தை சேர்ந்த அரசு டாக்டர் சையது நாசர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்.‘ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குற்றச்சாட்டு குறிப்பாணையையும் (சார்ஜ் மெமோ) அனுப்பியுள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் மற்றும் குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதுபோல, டாக்டர் சாரதாபாய் உள்பட பல டாக்டர்கள் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்குகளை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கிற்கு தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்