திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி - துறைத்தலைவர் மீது புகார் தெரிவித்து கடிதம்

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துறைத்தலைவர் மீது புகார் தெரிவித்து அந்த மாணவி கடிதம் எழுதி வைத்திருந்தார்.

Update: 2019-11-16 22:30 GMT
திருச்சி,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 19). திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகத்தில் எம்.எஸ்சி. ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் ஜியாலஜி (நிலத்தியல்) 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி தினமும் வகுப்புக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அறையில் ஜெனிபர் மயங்கி கிடந்தார். அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. மேலும் அவர் ‘பினாயில்’ குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. அவரை சக மாணவிகள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் கே.கே.நகர் போலீசார் விரைந்து சென்று மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்தனர். அந்த கடிதத்தில், “உங்களை விட்டு போறேன். யாராலயும் நம்ம துறைத்தலைவரை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாது. நமது வகுப்பு மாணவர்களிடம் பேசுவதை துறைத்தலைவர் தவறாக பேசுகிறார். என்னோட நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நான் போனதுக்கு பின்னராவது, இப்படி கொடுமைப்படுத்துற துறைத்தலைவர் மாறுவாரா? பார்க்கலாம். நீங்க சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு படிக்கவே பிடிக்கவில்லை. வகுப்புக்கு வரும்போது தினமும் பயந்தபடி வரவேண்டி உள்ளது. நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை தான். முடிஞ்சா இந்த துறைத்தலைவர் கிட்ட இருந்து போயிடுங்க” என்று கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் துறைத்தலைவர் மீது புகார் தெரிவித்தும், மாணவர்களை பற்றியும், தனது தோழிகளை பற்றியும் கூடுதலாக அவர் எழுதியிருந்ததாகவும், மொத்தம் 2 பக்கம் எழுதி இருந்ததாகவும் போலீசார் கூறினர்.

இந்த நிலையில் மாணவி ஜெனிபரின் தாய் செல்வி, சக மாணவ-மாணவிகள் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில், துறைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தனர். மனுவை பெற்ற கமிஷனர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

மனு கொடுக்க வந்த மாணவர்கள் கூறியதாவது:-

கடந்த மாதம் நடந்த தேர்வின்போது வினாத்தாள் செல்போனில் வெளியானது. இதனை கல்லூரி பேராசிரியர் ஒருவர் தான் வெளியிட்டார். அவர் பணியில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் அந்த வினாத்தாளை செல்போனில் பரப்பியது தொடர்பாக துறைத்தலைவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவ-மாணவிகளின் செல்போன்களை வாங்கி பார்த்து விசாரணை நடத்தினார். இதில் மாணவிகளின் தனிப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் அவர் பார்த்தார். சிலரது விவரங்களை அவர் எடுத்து வைத்துக்கொண்டார். இந்த சம்பவத்தில் தான் ஜெனிபரின் செல்போனை வாங்கி அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை துறைத்தலைவர் பார்த்து ஏதோ கேட்டதாக தெரிகிறது. அதனால் ஜெனிபர் மன உளைச்சலுக்கு ஆளானார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாணவியின் செல்போனில் இருந்த தனிப்பட்ட விவரங்களை துறைத்தலைவர் பார்த்து கண்டித்ததால் ஜெனிபர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்