மேலவளவு கொலை வழக்கு; விடுதலையான 13 பேரும் கிராமத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை

மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் கிராமத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-27 13:31 GMT
மதுரை,

கடந்த 1997-ம் ஆண்டு, மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உள்பட 7 பேரை ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்கள் மீதான தண்டனையை உறுதி செய்தது.

இதையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் ஏற்கனவே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 8ந்தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலவளவு கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான அரசாணை நகலை வழங்கக்கோரி மூத்த வக்கீல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான அதிகாரிகளை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து இதுபற்றிய வழக்கு விசாரணையின் போது 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.  மேலும் விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர்கள் 13 பேரும் பாஸ்போர்ட் வைத்திருந்தால், அவற்றை மதுரை எஸ்.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதனுடன், வேலூரில் தங்கும் முகவரி, மொபைல் எண்களை வேலூர், மதுரை எஸ்.பி.க்களுக்கு 13 பேரும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்