‘கடமையை செய்ய முடியாவிட்டால் இயலாமை மனுவை தாக்கல் செய்யுங்கள்’ மாநகராட்சி கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

மீன் வியாபாரிகளை அப்புறப்படுத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்றால், கடமையை செய்ய முடியவில்லை என்று தன்னுடைய இயலாமையை மனுவாக தாக்கல் செய்யும்படி மாநகராட்சி கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-27 22:37 GMT
சென்னை, 

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தரப்படும் நிதியை அதிகரிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, மெரினா கடற்கரையில் உள்ள அசுத்தத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

மேலும், ‘மெரினா கடற்கரையை ஏன் மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை? மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடு திருப்தியாக இல்லை’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா இணைப்பு சாலையில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளது. அவர்களை அகற்றும்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரலாம் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், ‘ஐகோர்ட்டின் உத்தரவையும், சட்டத்தையும் அமல்படுத்தும்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்று கூறுவது, அதிகாரிகள் தங்களால் கடமையை செய்ய முடியவில்லை என்பதையே காட்டுகிறது.

ஏற்கனவே, மெரினா இணைப்பு சாலை வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனருடன், இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டில் உத்தரவை மாநகராட்சி கமிஷனர் அமல்படுத்தவில்லை என்று கூறினர்.

பின்னர் ‘தெரு வியாபாரிகள் சட்டத்தையும் முறையாக அமல்படுத்தவில்லை’. எனவே, ‘மீன் வியாபாரிகளை அப்புறப்படுத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும், இந்த விஷயத்தில் தன்னால் கடமையை செய்ய முடியவில்லை என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் தனது இயலாமையை சுட்டிக்காட்டி அறிக்கையாக மனு ஒன்றை தாக்கல் செய்யலாம்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற டிசம்பர் 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்