“எனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார்” மாணவர் ரிஷிகாந்தின் தந்தை பரபரப்பு வாக்குமூலம்

“எனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார்” என்று மாணவர் ரிஷிகாந்தின் தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-11-29 23:28 GMT
மதுரை, 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சில மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்ததாக எழுந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இது தொடர்பாக பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ரவிக்குமார், அவருடைய மகன் ரிஷிகாந்த் ஆகிய இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே இந்த மனு மீதான விசாரணையின்போது, ரிஷிகாந்த் பெயரில் வேறு ஒருவர் நீட் தேர்வை எழுதியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரது விரல் ரேகையும், தேர்வு மையத்தில் பதிவாகி இருந்த விரல் ரேகையும் வேறுபட்டு இருப்பதை தடய அறிவியல் சோதனை முடிவு உறுதி்படுத்தி உள்ளது என்றும் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரிஷிகாந்தின் தந்தை ரவிக்குமார், நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜராகி, சம்பவம் குறித்த உண்மைகளை தெரிவிக்கும்படி நேற்று முன்தினம் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரவிக்குமார் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜராகி தனது மகன் ரிஷிகாந்த் நீட் தேர்வை எழுதவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒருவர் எழுதினார் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என நீதிபதியிடம் அரசு வக்கீல் ராபின்சன் தெரிவித்தார்.

எனினும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அரசு வக்கீல் கூறினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த பரபரப்பு உத்தரவு வருமாறு:-

மனுதாரர்கள் கூறிய தகவலை நம்பித் தான், அவர்களை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கோர்ட்டில் தவறான தகவலை தெரிவித்துள்ளனர் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

பெற்றோர் தங்களின் கனவுகளை நனவாக்கும்பொருட்டு பிள்ளைகளை தவறான நடவடிக்கைகளுக்கு உட்படுத்துகின்றனர். இந்த வழக்கை பொறுத்த வரை, மனுதாரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதியாகிறது.

எனவே இவர்களில் யாராவது ஒருவர் சிறையில் இருக்க வேண்டும். எனவே வருகிற செவ்வாய்க்கிழமை அன்று சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைவதாகவும், 60 நாட்கள் வரை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்வதில்லை என்றும் மாணவரின் தந்தை ரவிக்குமார் ஒப்புதல் அளித்துள்ளார்.

எனவே அவரது மகன் ரிஷிகாந்துக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 7 நாட்களுக்கு தினந்தோறும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வருகிற 3-ந்தேதி வரை ரவிக்குமாரை கைது செய்ய விதித்த இடைக்கால தடை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்