கடலூரில் கனமழை; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

கடலூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2019-12-01 05:04 GMT
கடலூர்,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிறது.  இவற்றில் கடலோர பகுதியில் அமைந்துள்ள கடலூரில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கடலூரில் கனமழை காரணமாக பெரிய பட்டு மற்றும் பூச்சி மேடு இடையேயான தரைப்பாலம் உடைந்துள்ளது.  15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணி வரை கடலூரில் 11.4 செ.மீ., நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  கடலூரில் தொடர் மழையால் வீராணம் ஏரியில் இருந்து பாதுகாப்பு காரணமாக 5,300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக விருத்தாசலம் - கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.  நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. நிலக்கரி இருப்பு உள்ளதால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை.

தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லும்படி மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் எம்.சி. சம்பத் அளித்துள்ள பேட்டியில், கடலூரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்று நிவாரண முகாம்களை பார்வையிட்ட பின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்