ஜாமீனில் வந்து மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர்கள்

குழந்தை விற்பனை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பெண் இடைத்தரகர்கள் மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-12-18 04:05 GMT
கோவை,
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் (நர்சு) அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், டிரைவர் நந்தகுமார், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுகலை நிபுணர் ரேகா மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் விசாரணையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கும்பல் மூலம் விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 4,300 குழந்தைகள் பிறந்து இருப்பதும், அவர்களில் சுமார் 260 குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் உள்ள முகவரியில் இல்லை என்பதும் தெரியவந்தது. எனவே அந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளார்களா? இல்லை எனில் அவர்களின் பெற்றோர் குடிபெயர்ந்து விட்டார்களா? என சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

இவர்களில் அமுதவள்ளி, ரவிச்சந்திரன், முருகேசன் மற்றும் லீலா ஆகியோர் ஜாமீனுக்கான தகுந்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ததால் சிறையில் இருந்து கடந்த ஆகஸ்டில் விடுவிக்கப்பட்டனர்.

ஜாமீனில் வெளிவந்த பின்னர் பெண் இடைத்தரகர்கள் மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர்.  அவர்கள் கோவையில் ஆண் குழந்தை ஒன்றை விற்க முயற்சித்தபோது பேரம் பேசியுள்ளனர்.  இதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் பிடிபட்டுள்ளனர்.

அவர்களில் பெண் இடைத்தரகர்களான ஹசீனா, கல்யாணி உள்ளிட்ட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நாமக்கல்லில் குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர்கள் மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்