பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்த பின்னரே ஓட்டுப்போட்ட மக்கள்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடு்த்தவரை கைது செய்த பின்னரே கிராம மக்கள் ஓட்டுப்போட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவில் 45 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.

Update: 2019-12-27 22:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதையொட்டி ஏழாயிரம் பண்ணை அருகே ரெட்டியபட்டி கிராமத்தினர் பலர் வாக்களிக்க அங்குள்ள வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டனர்.

அப்போது அதேபகுதியை சேர்ந்த சமுத்திரராஜன்(வயது39) என்பவர் வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த பெண்ணின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து சமுத்திரராஜனை பிடித்து அடித்து உதைத்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். தேர்தல் பணி காரணமாக போலீசார் அங்கு இல்லாததால் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க தாமதமானது.

இதையடுத்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை உடனே போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏழாயிரம் பண்ணை போலீசார் விரைந்து வந்து சமுத்திரராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து முதல் தகவல் அறிக்கையை கிராமத்தினரிடம் காண்பித்தனர்.

அதன்பின்னரே ரெட்டியபட்டி கிராமத்தினர் வாக்களித்தனர். இதனால் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதம் அடைந்து, அதன் பின்னர் தொடர்ந்து நடைபெற்றது.

மேலும் செய்திகள்