கோலம் வரைந்து போராடிய பெண்கள் மீதான வழக்கு திரும்ப பெறப்பட வேண்டும்; மு.க. ஸ்டாலின்

கோலம் வரைந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய பெண்கள் மீதான வழக்கு திரும்ப பெறப்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-12-29 08:07 GMT
சென்னை,

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் பெண்கள் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அடையாறு சாஸ்திரி நகர்  போலீசார் கோலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர்.  எனினும், சிலர் அந்த இடத்தில் இருந்து நகராமல் இருந்தனர்.  தொடர்ந்து கோலம் வரைவதில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  பின்பு போலீசார் அவர்களை விடுவித்தனர்.

எனினும், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்து போராடிய 6 பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அலங்கோல அ.தி.மு.க. அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய,
6 பேரை அரசியலமைப்பு சட்டம் வழங்கிய, அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்த தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்ப பெறப்பட வேண்டும்.  மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்! என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்