டெல்லி மாணவர்கள் தாக்குதலை கண்டித்து சென்னையில், ஒரே இடத்தில் 2 ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் ஒரே இடத்தில் 2 ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.

Update: 2020-01-07 21:30 GMT
சென்னை, 

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் ஒரே இடத்தில் 2 ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும், அந்த குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா, காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ. தமிழ்நாடு கிளை தலைவர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்காததால் மேடை அமைக்கப்படவில்லை. மினி லாரியில் நின்றவாறு கே.எஸ்.அழகிரி கண்டன உரையாற்றினார்.

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பெசன்ட் நகரில் கோலம் போட்டது தொடர்பாக கைதான காயத்ரி தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு முன்பாக சிறிது தொலைவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு எதிராக கோலம் போட்டும், கோஷம் எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கண்டித்து ஒரே இடத்தில் 2 குழுக்களாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

கே.எஸ்.அழகிரி கண்டன உரையாற்றியபோது, காயத்ரி தலைமையிலான குழுவினர் மேளம் அடித்து, சிறிய ஒலிபெருக்கியில் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த கே.எஸ்.அழகிரி, தங்களுடைய போராட்டம் முடியும் வரை இடையூறு ஏற்படுத்தவேண்டாம் என்று அவர்களிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இதனை அந்த குழுவினர் கண்டுகொள்ளவில்லை. ஒரு வழியாக சிரமத்துக்கு இடையே தனது பேச்சை கே.எஸ்.அழகிரி முடித்தார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், போராட்டம் நடத்திய காயத்ரி குழுவினரிடம் கே.எஸ்.அழகிரி சென்றார். “எங்களுடைய ஆர்ப்பாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவே செயல்படுகிறீர்களே ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த குழுவினர், “நாங்களும் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தி வருகிறோம்” என்றனர். இது காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அப்போது கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தொண்டர்களிடம் காயத்ரி தலைமையிலான குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் 2 தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனைதொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

காயத்ரி தலைமையிலான குழுவினர் தொடர்ந்து அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒரே கோரிக்கைக்காக தான் 2 தரப்பினருமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாதது அங்கு வந்திருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்