குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் அனுப்பிய தொழில் அதிபர் கைது; சென்னை போலீசார் நடவடிக்கை

குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து முகநூல் மூலம் வேறொருவருக்கு அனுப்பிய தொழில் அதிபர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-11 22:15 GMT
சென்னை, 

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரித்து இருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து அவர்களது பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களில் பலர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டை சேர்ந்த சுமித்குமார் கல்ரா(வயது 49) என்பவர் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பார்த்து விட்டு வேறொருவரின் முகநூலுக்கு அனுப்பி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் சுமித்குமார் கல்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சுமித்குமார் கல்ரா, சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் உடற்பயிற்சி சாதன மொத்த வியாபாரம் செய்து வருகிறார். தொழில் விஷயமாக டெல்லி சென்றிருந்த அவர் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்