அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உத்தரவு

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-01-13 07:34 GMT
மதுரை

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜனவரி 16 முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோன்று சூரியூர், கருங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

கடந்த ஒரு வாரமாகவே அலங்காநல்லூர், பாலமேட்டில் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அவனியாபுரத்தில் விழா குழுவினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பாடுகள் தாமதமாக தொடங்கின. இருப்பினும் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அங்கும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு குழுவில் உள்ள கிராம கமிட்டியில் அனைத்து சமுதாய பிரதிநிதிகளும் அடங்குவார்கள்.

அலங்காநல்லூர், பாலமேட்டில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்று காளைகளுக்கான பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அலங்காநல்லூரில் 700 காளைகளும், பாலமேட்டில் 650 காளைகளும்  அனுமதிக்கப்படும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

இன்று (13-ந்தேதி) அலங்காநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசினர் பெண்கள் பள்ளியில் காளைகளுக்கான பதிவு தொடங்கியது. 30-க்கும்  மேற்பட்ட மருத்துவ குழுவினர் காளைகளின் உடல் தகுதியை ஆய்வு செய்தனர். காளைகளின் உயரம், வயது, கொம்பின் தன்மை, எடை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் காளைகளின் உரிமையாளர்களின் ரேசன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டு காளைகளுக்கான பதிவு டோக்கன் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்