கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீதான வருமான வரி வழக்கு விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீதான வருமான வரித்துறை வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று கீழ் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-21 22:26 GMT
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டில் சொத்துகள் இருந்தது. இந்த சொத்தை கடந்த 2015-ம் ஆண்டு தனியார் நிறுவனத்துக்கு இருவரும் விற்பனை செய்தனர். இதன் மூலம் கிடைத்த தொகையில் ரூ.7 கோடியே 73 லட்சத்தை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்று குற்றம் சுமத்தி, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக எழும்பூர் கோர்ட்டில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

குற்றச்சாட்டு பதிவு

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவு இன்று (நேற்று) சிறப்பு கோர்ட்டில் நடைபெற உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை காலதாமதமின்றி விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, ‘இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிய வேண்டியது உள்ளது. மேலும், இந்த வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே மனுதாரர்கள் தொடர்ந்துள்ளனர். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, சிறிது காலத்துக்கு வழக்கின் விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கூறினார்.

நிறுத்தி வைப்பு

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதுவரை கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிறப்பு கோர்ட்டு நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்