அரசு தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

அரசு தேர்வுகளில் முறைகேடு குறித்து விசாரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Update: 2020-01-26 00:00 GMT
பூந்தமல்லி, 

திருவேற்காடு நகராட்சியில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பெரு வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிர்வாகிகளுடன் கருத்துகேட்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவேற்காடு நகராட்சி கமிஷனர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, வங்கி நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-

பாதிக்காது

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மாசுகட்டுப்பாட்டு ஆய்வு தேவையில்லை என மத்திய மந்திரி கூறியுள்ளார். ஆனால் தமிழக மக்களை பாதிக்கும் எந்த திட்டம் என்றாலும் அதை எந்த வழியிலும் தடுத்து நிறுத்த தமிழக அரசு முயற்சி எடுக்கும். இந்த திட்டத்தால் பாதிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்துதான் சொல்ல முடியும்.

சசிகலா விடுதலை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். சசிகலா விடுதலை ஆவதும், ஆவாததும் என்னை பொறுத்தவரை எந்தவிதத்திலும் பாதிக்காது.

உரிய நடவடிக்கை

அ.தி.மு.க.வில் தலைமைக்கு வெற்றிடம் இல்லை. நிறைவான ஆட்சியும், நிறைவான கட்சி வழிநடத்துதலும் நடந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் வெற்றிமேல் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறோம் என நினைக்கிறோம்.

தமிழகத்தில் அரசு தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு நாங்கள் காரணம் என கூறுவது தவறு. இதுகுறித்து விசாரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்