குரூப்-4 தேர்வு ரத்து ஆகுமா? மோசடி தொடர்பாக மேலும் 2 பேர் கைது

குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2020-01-29 00:00 GMT
சென்னை, 

குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே இந்த தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது. இது தவிர சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணையை தொடங்கினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், 99 பேர் குரூப்-4 தேர்வில் இடைத்தரகர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் உதவியுடன் அழியும் மையால் தேர்வெழுதி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 99 பேரையும் தகுதிநீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே முறைகேடாக தேர்ச்சி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த விக்கி (வயது 25), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்த சிவராஜ் (31) ஆகிய 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதையொட்டி கைது எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் 2 பேரும் தலா ரூ.7½ லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சம் இடைத்தரகர்களுக்கு கொடுத்து குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கைது செய்யப்பட்ட சிவராஜ் தேர்வில் 300-க்கு 258 மதிப்பெண் எடுத்து உள்ளார். மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. அரசு வேலை கிடைத்தால் எளிதில் திருமணம் செய்து விடலாம் என்ற ஆசையில் சிவராஜ், இந்த முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் இடைத்தரகரிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ள இவர், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பழகுனர் பயிற்சி முடித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்தார். சிவராஜின் தந்தை ராமானுஜம் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார்.

ஏற்கனவே இந்த வழக்கில் கைதான சீனுவாசன் (பண்ருட்டி சிறு கிராமத்தை சேர்ந்தவர்) பட்டப்படிப்பு முடித்துவிட்டு சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். அவரும் தேர்வை முறைகேடாக எழுதியதோடு, இடைத்தரகராகவும் செயல்பட்டு உள்ளார். சீனுவாசன், சிவராஜ் ஆகியோர் உறவினர்கள் ஆவர்.

நேற்று கைதாகியுள்ள சேந்தமங்கலத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்துள்ளார். இவருடைய தந்தை தண்டபாணி கெடிலத்தில் சிமெண்டு கடை வைத்துள்ளார். விக்னேஷ் விவசாயம் செய்து வந்துள்ளார். அதோடு தனது தந்தைக்கு உதவியாக சிமெண்டு கடையையும் கவனித்து வந்தார். அரசு வேலையில் குறுக்கு வழியில் சேர எண்ணிய விக்னேஷ், இடைத்தரகரிடம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்து ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு டி.என்.பி. எஸ்.சி. உயர்அதிகாரிகள் 3 பேர் வந்தனர். அவர்கள் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்சேட் உள்ளிட்ட உயர் அதிகாரிகளோடு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதுவரை இந்த வழக்கில் கிடைத்துள்ள தகவல்களையும், ஆதாரங்களையும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கேட்டு தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் டி.என்.பி. எஸ்.சி. அதிகாரிகள் தங்களிடம் உள்ள சில ஆதாரங்களையும், ஆலோசனையின்போது கொடுத்ததாக கூறப்படுகிறது.

குரூப்-4 தேர்வில் முறை கேடில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு ஆயுள் கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வழக்கில் சிக்கியுள்ள குரூப்-4 தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்