கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் தமிழக அரசுக்கு இந்திய தூதரகம் கடிதம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் தவித்து வரும் சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என தமிழக அரசுக்கு சீனாவில் உள்ள இந்திய தூதரகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

Update: 2020-01-28 22:00 GMT
சென்னை,

சீனாவை பாடாய்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அங்கு ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட உகான் நகர் அமைந்துள்ள ஹூபெய் மாகாணம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலை, விமான, ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்கள் போதுமான உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். தங்களது பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக மாணவர்கள், கட்டிடத்திற்குள்ளேயே முடங்கி இருப்பதாகவும், முக கவசம் (மாஸ்க்) வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை என கண்ணீர்மல்க தெரிவித்தனர். இதன்பின்பு சீனாவில் தவிக்கும் தமிழர்கள் உள்பட இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து தமிழக அரசு, இந்த விவகாரம் தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியது.

இந்த நிலையில் தமிழக அரசின் கடிதத்துக்கு சீனா பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் பதில் அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகத்தின் துணை தலைமை அதிகாரி அக்யூனோ விமல், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

இந்திய அரசு சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சீன அரசும் இவ்விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு பயனுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நகரங்களில் அனைத்து மக்களுக்கும் நல்ல உணவு மற்றும் எரிபொருளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சீன அரசு எங்களுக்கு உறுதி அளித்து உள்ளது.

வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளன. நோய் பாதிப்பு குறித்த அறிகுறி தென்பட்டால் இந்த மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்ற விழிப்புணர்வும் பரப்பப்பட்டு வருகிறது.

இந்திய தூதரகம் ஹூபெய் மாகாணத்தில் உள்ள அனைத்து இந்தியர்களுடனும், குறிப்பாக உகான் நகரில் உள்ள இந்தியர்களிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இந்திய தூதரக அதிகாரிகளை +8618612083629 மற்றும் +8618612083617 என்ற 2 உதவி எண்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்பு கொள் ளலாம். கூடுதலாக, ஹூபெய் மாகாணத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் தொடர்பு கொள்ளும் வகையில் ‘விசாட்’ குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது, இதனால் எந்தவொரு பயனுள்ள தகவலையும் எளிதில் தெரிவிக்க முடியும்.

இந்திய மாணவர்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் படிக்கும் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் தூதரகம் பேசி வருகிறது. இங்குள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை தொடர்ந்து கண்காணித்துவரும் இந்திய தூதரகம், பீஜிங்கில் உள்ள சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஹூபெய் மாகாண, உகான் நகரத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளது.

இங்குள்ள இந்தியர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்