போலீசார் மிரட்டியதால் தற்கொலை: ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

போலீசார் மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-03 22:00 GMT
சென்னை, 

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் மணிமேகலை. இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது கணவர் எழுமலை ஆட்டோ டிரைவர். கடந்த 2013-ல் கொத்தவால்சாவடி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி விட்டதாக கூறி ரூ.5 ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப்பதிவு செய்து விடுவதாகவும் போலீசார் எனது கணவரை மிரட்டி உள்ளனர். 

இதனால் அவர், தான் வைத்திருந்த ரூ.600-ஐ மட்டும் கொடுத்து விட்டு மீதி பணத்தை மறுநாள் தருவதாக கூறி உள்ளார். மறுநாள் ஒரு போலீஸ்காரர் எனது வீட்டுக்கு வந்து கணவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

இந்த நிலையில் கணவரின் செல்போனில் இருந்து பேசிய நபர், எனது கணவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அங்கு சென்று பார்த்தபோது, போலீசார் மிரட்டியதால் எனது கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், மனுதாரரின் கணவர் இறப்புக்கு போலீசார் காரணமாக இருந்துள்ளதால் மனுதாரருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்