பணம் திரட்டுவதற்காக மட்டுமே எல்.ஐ.சி. பங்குகளை விற்கக்கூடாது - ப.சிதம்பரம் கருத்து

பணம் திரட்டுவதற்காக மட்டுமே எல்.ஐ.சி. பங்குகளை விற்கக்கூடாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2020-02-03 22:30 GMT
சென்னை, 

பணம் திரட்டுவதற்காக மட்டுமே எல்.ஐ.சி. பங்குகளை விற்கக்கூடாது, அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

தென்னிந்திய தொழில் வர்த்தகசபை சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கம் பற்றிய ஆய்வு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. பேசியதாவது:-

இந்திய பொருளாதாரத்தில் இரண்டு பெரிய பிரச்சினைகள் என்னவென்றால், பொருட் களை மக்கள் வாங்கும் நிலை குறைந்துவிட்டது. அடுத்ததாக, போதுமான அளவு முதலீடுகளும் செய்யப்படவில்லை. மக்களை வாங்கத்தூண்டவும், முதலீட்டை ஈர்ப்பதற்கும் என்ன செய்ய வேண்டும்? என சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் இந்த பட்ஜெட் அதை செய்யவில்லை.

500 பெருநிறுவனங்களுக்கு பயனளிப்பதற்கு மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் பட்ஜெட்தான் தற்போதைய தேவை.

அரசு செலவீனம், தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி ஆகியவற்றின் மூலம் மக்களின் தேவையை உயர்த்த முடியும். அரசு மேற்கொள்ளும் செலவுகள் மூலமாகவே மக்களின் கைகளுக்கு நேரடியாக பணம் சென்றுசேரும். மக்களின் கைகளில் பணம் இருக்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்க வேண்டும். மக்களுக்கு நேரடியாக தொடர்புடைய திட்டங்களில் அரசு அதிக நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்.

100 விமான நிலையங்களை உருவாக்குவது இப்போது தேவைதானா? ஏற்கனவே சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி விமான நிலையங்களில் போதுமான அளவு விமானமோ, பயணிகளோ இல்லை என்கிறபோது, அதுபோன்ற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவையில்லை.

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம், பிரதமர் கிசான் திட்டம் போன்ற திட்டங்களில் அதிக நிதி ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அதற்கு நிதியை குறைத்துள்ளனர். ஏற்றுமதி ஏறுவதற்கு பதில் குறைந்துவிட்டது. சுங்க கட்டணத்தை அதிகரித்திருப்பது ஏற்றுமதி, இறக்குமதியை பாதிக்கும். ஒரு பொருளுக்கு நல்ல ஏற்றுமதி சந்தை இருந்தால் அதற்கான மானியத்தை அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பும் உயரும்.

தனியார் துறை அரசை நம்பவில்லை. அதுபோல தனியார் நிறுவனங்களையும் கருப்பு ஆடுகளாகவே மத்திய அரசு பார்க்கிறது. ஒன்றிரண்டு கருப்பு ஆடுகள் இருப்பதால் அனைவரையும் அதே கோணத்தில் பார்க்கக்கூடாது.

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதில் எனது ஆதரவு உண்டு. ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பது அவ்வளவு எளிதானதல்ல. எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை பற்றி காங்கிரஸ் இன்னும் கருத்து கூறவில்லை.

ஆனால் எனது கருத்து, அவற்றை பணம் திரட்டுவதற்காக மட்டுமே விற்பனை செய்யக்கூடாது என்பதாகும். அவற்றை விற்பனை செய்வதற்கான உண்மையான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் தொழில் துறையை சேர்ந்தவர்களின் கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்