2020-21-ம் ஆண்டில் கடன் வழங்க தமிழகத்துக்கு தேவையான நிதி ரூ.2½ லட்சம் கோடி - நபார்டு வங்கி மதிப்பீடு

2020-21-ம் ஆண்டில் கடன் வழங்க தமிழகத்துக்கு தேவையான நிதி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 629 கோடி என நபார்டு வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

Update: 2020-02-06 20:30 GMT
சென்னை, 

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) சார்பில் மாநில கடன் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் கலந்து கொண்டு, 2020-21-ம் ஆண்டில் கடன் வழங்க தமிழகத்துக்கு தேவையான நிதி எவ்வளவு? என்பது குறித்து நபார்டு வங்கி மாவட்டம் தோறும் ஆய்வு செய்து தயாரித்த தமிழ்நாட்டின் வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் நபார்டு வங்கி ஆற்றிவரும் சீரிய பணி பாராட்டுக்குரியது. மாநில அரசுகளுக்கும், வங்கித்துறைக்கும் நபார்டு வங்கி அறிவுப்பூர்வமான ஆலோசகராக செயல்பட்டு வருகிறது’ என்றார்.

கருத்தரங்கில் நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் பேசும்போது கூறியதாவது:-

மாநிலத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கடன் திட்டமிடுதலுக்கு உதவும் வகையில் மாவட்ட வாரியாக கடன் மதிப்பீட்டு திட்டங்களை நபார்டு வங்கி பல ஆண்டுகளாக தயாரித்து அரசுக்கு வழங்கி வருகிறது.

வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் 2020-21-ம் ஆண்டுக்கான கடன் மதிப்பீட்டு திட்டங்கள் மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்டு மாநில கடன் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2020-21-ம் ஆண்டில் கடன் வழங்க தமிழகத்துக்கு 2 லட்சத்து 45 ஆயிரத்து 629 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இது 2019-20-ம் ஆண்டு மதிப்பீட்டை காட்டிலும் 8.25 சதவீதம் கூடுதல் ஆகும்.

இதில், விவசாயத் துறைக்கு வழங்கப்பட உள்ள கடன் 1 லட்சத்து 33 ஆயிரத்து 6 கோடி ரூபாயும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு வழங்கப்பட உள்ள 46 ஆயிரத்து 899 கோடி ரூபாயும் அடங்கும்.

நபார்டு வங்கியின் இந்த மாநில வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கை உயர் தொழில்நுட்ப வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் வினய் டோன்ஸ், ரிசர்வ் வங்கி பொது மேலாளர் மோகனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்