‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கு: ஆள் மாறாட்டம் செய்த 10 மாணவ-மாணவிகள் புகைப்படத்தை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. தேடுதல் வேட்டை

‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கில், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளின் புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Update: 2020-02-12 00:15 GMT
சென்னை,

‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடு இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தேனி மருத்துவகல்லூரி மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என மொத்தம் 14 பேரை கைது செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆள் மாறாட்டம் மூலம் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் சார்பாக நேற்றிரவு ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அந்த செய்திக்குறிப்புடன், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 2 மாணவிகள், 8 மாணவர்கள் புகைப்படங்களை வெளியிட்டனர். புகைப்படத்தில் உள்ளவர்களின் பெயர் விவரங்களோ, முகவரியோ தெரியவில்லை என்றும், அவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. சென்னை அலுவலகத்துக்கு 9443884395 என்ற செல்போன் எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

de-p-c-cw-c-b-c-id@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்