தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க 12 சிறப்பு அதிகாரிகள் நியமனம் - முதலமைச்சரை சந்தித்து டி.ஜி.பி. ஆலோசனை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் 12 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2020-02-17 00:15 GMT
சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 13-ந் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதில், வருகிற 28-ந் தேதி வரை சென்னை நகரில் போலீசாரின் அனுமதி இன்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங் களை நடத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், போலீசாரின் உத்தரவை மீறி சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந் தேதி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில், போலீசார் மீது நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர். இதனால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இந்த தடியடி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் சுமுக உடன்பாடு எட்டப்படாத நிலையில், வருகிற 19-ந் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக இஸ்லாமிய இயக் கங்கள் அறிவித்து உள்ளன. தற்போது, சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால், போராட்டங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் நேற்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. அப்போது, தமிழகத்தில் போராட்டங்கள் தலைதூக்க காரணம் என்ன?. சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் உண்மை நிலை என்ன?. சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவது யார்?. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை எவ்வாறு பராமரிப்பது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின்னர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றார்.

அதே நேரத்தில், முதல்- அமைச்சர் வீட்டிலேயே தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக் கப்பட்டது.

இதற்கிடையே போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதாவது, தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் 12 சிறப்பு அதிகாரிகளை அவர் நியமித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும் 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மதுரை நகரம் மற்றும் மதுரை சரகத்துக்கு அபய்குமார் சிங், நெல்லை நகரம் மற்றும் நெல்லை சரகத்துக்கு மகேஷ்குமார் அகர்வால், எஸ்.முருகன், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனி பகுதிக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டம் கம்பம், போடி பகுதிக்கு வி.பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதிக்கு பி.மகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. செயல்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல், ரெயில்வே துறைக்கு போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி தனியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் நிலையில், அதை கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

மத்திய மண்டலத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், தஞ்சாவூர் சரகத்துக்கு சாரங்கன், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிக்கு ஜி.ராமர், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் பகுதிக்கு ஆர்.ராமகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் பகுதிக்கு டி.செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், இலுப்பூர், பொன்னமராவதி பகுதிக்கு எஸ்.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

இவர்களை ஒருங்கிணைத்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. செயல்படுவார். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்வார். இந்த சிறப்பு அதிகாரிகள் ‘மைக்’ பொருத்தப்பட்ட அலுவலக வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்