தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை செசன்சு கோர்ட்டு ‘சம்மன்’

மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.

Update: 2020-02-17 22:15 GMT
சென்னை, 

இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்து கடந்த 28.12.2019 அன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை முரசொலி பத்திரிகையில் வெளியானது.

அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்ட 6 பேரை போலீசார் கைது செய்த விவகாரத்தில், அ.தி.மு.க. ஆட்சி குறித்து விமர்சனம் செய்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்து 29.12.2019 அன்று முரசொலி பத்திரிகையில் வெளியானது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில், மாநகர குற்றவியல் அரசு வக்கீல் தனித்தனியாக 2 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு தரப்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(மார்ச்) 4-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. அரசையும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையும் விமர்சித்து பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கிலும் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்