ஒலி மாசில் சென்னை முதல் இடம் - டாக்டர் ராமதாஸ் வேதனை

ஒலி மாசில் சென்னை முதல் இடத்தில் இருப்பது கவலையளிப்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-18 20:30 GMT
சென்னை, 

இந்தியாவின் முன்னணி பெருநகரங்களில் அதிகரித்து வரும் ஒலி மாசு குறித்த புள்ளி விவரங்களை ஆண்டுக்கு ஒருமுறை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கணக்கெடுப்பு விவரங்களை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவின் முன்னணி பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகியவற்றில் சென்னையில்தான் அதிக ஒலி மாசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் அதிகபட்ச இரைச்சல் பகல் நேரங்களில் 55 டெசிபல் அளவையும், இரவு நேரங்களில் 45 டெசிபல் அளவையும் தாண்டக்கூடாது என விதிகள் கூறுகின்றன. ஆனால் சென்னையில் பகலில் 67.80 டெசிபல் அளவும், இரவில் 64 டெசிபல் அளவும் இரைச்சல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் ஒலி மாசை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் நோய்களும், மன அழுத்தமும் நிறைந்த நகரமாக சென்னை சீரழிவதை தடுக்க முடியாது. சைக்கிள் பயணத்தை ஊக்குவித்தல், பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் கார்களின் எண்ணிக்கையை குறைத்தல், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பானை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் இரைச்சலை கட்டுப்படுத்த முடியும். 

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் சென்னையில் ஒலி இரைச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை ஓர் இயக்கமாகவே நடத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்