மலேசியாவில் இருந்து கோவை வந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

மலேசியாவில் இருந்து கோவை வந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-03-09 20:45 GMT
கோவை, 

மலேசியாவில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 30 வயது வாலிபர், அங்கிருந்து விமானம் மூலம் கடந்த 7-ந்தேதி திருச்சிக்கு வந்தார். அங்கு அவரை மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது.

இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று சிகிச்சை பெறுகிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து பஸ் மூலம் கோவை வந்தார்.

ஆனால் அவர் ஊருக்கு செல்லாமல் கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் அதிகமாக இருந்ததால், நேற்று முன்தினம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார்.

அவர் மலேசியாவில் இருந்து வந்ததாலும், தீராத காய்ச்சல், சளியுடன் இருமல் இருப்பதால் கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்று கருதிய டாக்டர்கள், அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததாலும், கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாலும், அவர் நேற்று காலை கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அத்துடன் அவருடைய சளி மாதிரி, ரத்தம் ஆகியவை எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட 30 வயதான கேரள வாலிபர் தீவிர சிகிச்சையில் உள்ளார்். பரிசோதனை முடிவில்தான் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும். மேலும் அவர் தங்கி இருந்த ஓட்டலில் அவருக்கு வேலை செய்த 2 நபர், தனியார் ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த ஊழியர் என்று மொத்தம் 3 பேரை வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவையில் பலர் முகக்கவசம் அணிந்தபடி நடமாடிவருகிறார்கள். ரெயில், பஸ்களில் முகக்கவசம் அணிந்து பலர் பயணம் செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்