வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரெயில் பாதை பணி தாமதம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரெயில் பாதை பணி தாமதம் ஏன்? என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.;

Update:2020-03-12 08:25 IST
சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் தா.மோ.அன்பரசன், “ஆலந்தூர் தொகுதியில் உள்ள ஆழப்பாக்கம் ஏரியை சீரமைப்பதற்காக ரூ.3.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. உடனே பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வேளச்சேரி - பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரெயில் பாதை பணி நிறைவடையாமல் உள்ளது. அந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். ஆலந்தூர் தொகுதியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, நெம்மேலி கடல் குடிநீரை கூடுதலாக வினியோகிக்க வேண்டும். ஆலந்தூரில் சார்பு நீதிமன்றத்தையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நிலம் எடுக்கின்ற பிரச்சினைகள் காரணமாக தான் நிலுவையில் இருக்கிறது. நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். நிலம் எடுப்பது எவ்வளவு பிரச்சினையான ஒன்று என்று உங்களுக்கு நன்றாக தெரியும். உடனடியாக நில உரிமையாளர்களிடத்தில் போய் அந்த நிலத்தை எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே, தான் முதற்கட்டப்பணியை முடித்த பிறகு, பாலம் கட்டும் பணியை துவக்கி இருந்தால் சரியாக இருந்திருக்கும். உங்கள் (தி.மு.க.) ஆட்சி காலத்திலே முதற்கட்ட பணி நிலம் எடுக்கின்ற பணி, அந்த பணியை மேற்கொள்ளாமலேயே பாலம் கட்டும் பணியை துவக்கிய காரணத்தினால் தான் இவ்வளவு காலதாமதம் ஆகிறது. இருந்தாலும் விரைந்து பாலம் கட்டும் பணியை முடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

அதேபோல, ஏரி ஆக்கிரமிப்பு பற்றி சொன்னார்கள். ஏரி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கு காலம் பிடிக்கும். உடனடியாக அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுகிறார்கள். நீதிமன்றத்திற்கு சென்றால் வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. இப்படிப்பட்ட காரணத்தினால் தான் காலதாமதம் ஆகின்றது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன். இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்து வேகமாக இந்த பணிகளை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்