தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு - ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8 பேர் பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.

Update: 2020-03-25 23:45 GMT
சென்னை, 

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று இரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 211 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 492 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு என்பது கண்டிப்பான உத்தரவு. அத்தியாவசிய தேவையை தவிர யாரும் வெளியே வரவேண்டாம்.

ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிரிக்கெட் விளையாடியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் 350 படுக்கைகளுடன் தனி ஆஸ்பத்திரி வெள்ளிக்கிழமை (நாளை) திறக்கப்படும். 225 சாதாரண படுக்கைகளும், தீவிர சிகிச்சைக்கு 125 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 125 படுக்கைகளில் 60 படுக்கைகள் அதி தீவிர சிகிச்சைக்காக ஒதுக்கப்படும். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக பரிசோதனை மையம் தொடங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகளின் பாதுகாப்பு தான் அரசுக்கு மிகவும் முக்கியம். அவர்களுக்கு நாள்தோறும் 60 ஆயிரம் முகக்கவசம் கிடைக்கும் வகையில் தொடர் வினியோகம் செய்யப்படுகிறது.

டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சலூன்கடைக்காரருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது குணமடைந்துள்ளார். 2 ரத்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இந்தநிலையில், இந்தோனேசியா நாட்டில் இருந்து வந்த 4 பேர் மற்றும் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னையை சேர்ந்தவர் மற்றும் 3பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்