உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு புதியதிட்டங்கள்- முதல்வர் பழனிசாமி

உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அறிவித்து உள்ளார்.

Update: 2020-04-07 11:08 GMT
சென்னை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்காக, 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவைப்படும் முக்கிய உணவுப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு தமிழக அரசு, போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட திட்டங்களை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்:

1. விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்வதில் உதவிட அவசரகால தொலைபேசி எண்:
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், தங்களது மாவட்ட வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம்.

இவை தவிர, மாநில அளவில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம். 044 – 22253884, 22253885, 22253496, 95000 91904. மேற்கண்ட அலுவலர்கள் விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு உண்டான வியாபாரிகளைத் தொடர்புகொள்ளுதல், சரக்கு போக்குவரத்துக்கான உரிய அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றுத் தருதல், குளிர்சாதன வசதியுள்ள கிடங்குகளுக்கு வழிகாட்டுதல் போன்ற சேவைகளுக்கு உதவிபுரிவார்கள்.

2. காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணம் முழுவதும் ரத்து
பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைத்திடவும், அவற்றைப் பாதுகாத்து, தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும், விவசாயிகளின் பயன்பாட்டுக்காக குளிர்பதனக் கிடங்குகள் இயங்கி வருகின்றன.

இக்கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேமித்து வைக்க விவசாயிகளிடமிருந்து பயன்பாட்டுக் கட்டணத் தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டும், இன்னும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் இப்பயன்பாட்டு கட்டணத் தொகை எதிர்வரும் 30.4.2020 வரை வசூலிக்கப்பட மாட்டாது. இக்கட்டணத் தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.

3. காய்கறிகள் மற்றம் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி

பொதுமக்களுக்கு நியாயமான விலையில், தரமான காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்கிடவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று கொள்முதல் செய்திட தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடனாக வழங்கப்படும்.

4. பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் கிடைப்பதற்கு நடமாடும் வாகனம் மூலம் விற்பனைகூட்டுப் பண்ணைய விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை, நகர்ப்புறங்களிலுள்ள நுகர்வோருக்கு, அவர்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கூடுதலாக 500 தோட்டக்கலைத் துறையின் நடமாடும் விற்பனை வாகனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும்.
5. சந்தைக் கட்டண விலக்கு:

தற்போது நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்தை எதிர்வரும் 30.4.2020 வரை செலுத்திட வேண்டியதில்லை.
விவசாயிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மேற்கண்ட வசதிகளை அனைத்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எவ்விதத் தடையுமின்றி கிடைத்திட உதவிடுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது".இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்