ஊரடங்கு மீறல் சென்னையில் 40 ஆயிரம் வழக்குகள் பதிவு - தமிழகத்தில் கைது எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரமாக உயர்வு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் அது தொடர்பாக 40 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-04-10 22:00 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வாகனங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று பகல் 12 மணி நிலவரப்படி, 1 லட்சத்து 25 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 லட்சத்து 35 ஆயிரத்து 734 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு நிலவரப்படி கைது எண்ணிக்கை, 1 லட்சத்து 42 ஆயிரமாக உயர்ந்தது. 1 லட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராத தொகை ரூ.48 லட்சம் வசூலானது.

சென்னையில் இதுவரை 40 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

முன்னதாக கமிஷனர் அலுவலக வாசலில் கிருமி நாசினி தெளிக்கும் எந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அந்த எந்திரத்தின் செயல்பாட்டை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஜெயராம், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர்கள் திருநாவுக்கரசு, டாக்டர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்