ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் கைது எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரமாக உயர்வு - சென்னையில் வழக்குகள் குறைந்தன

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் கைது எண்ணிக்கை, 3 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந் தது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னையில் நேற்று வாகனங்கள் அதிகம் ஓடாததால், வழக்குகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2020-04-26 20:30 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இதனால் இந்த 5 மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று வாகன போக்குவரத்து மிகவும் குறைந்துவிட்டது. தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை நேற்று அதிகம் காண முடியவில்லை.

இருந்தாலும் நேற்று பகல் நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் மீது இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், டி.ஜி.பி. அலுவலக தகவலில் தெரிவிக்கப்பட்டது. ரூ.3.30 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தகவலில் கூறப்பட்டி ருந்தது.

சென்னையில்...

சென்னையை பொறுத்தமட்டில் நேற்று முழு ஊரடங்கை பொதுமக்கள் பெரிய அளவில் மீறவில்லை. வழக்கமாக வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் சென்டிரல் பகுதி, கோயம்பேடு மார்க்கெட் பகுதி மற்றும் அனைத்து மேம்பாலங்களும் வாகன போக்குவரத்து இல்லாமல் காணப்பட்டது.

சென்னையை பொறுத்தமட்டில் ஊரடங்கு அமலில் உள்ள கடந்த 1 மாத காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் 32 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 ஆயிரத்து 972 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும், போக்குவரத்து போலீஸ் பிரிவில் 81 ஆயிரத்து 490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 ஆயிரத்து 406 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வழக்குகள் குறைந்தன

ஆனால் நேற்று வழக்கம் போல வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும்,ஆனால் வழக்குகள் மிகவும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டது என்றும் போலீசார் கூறினார்கள். மற்ற மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்னமும் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. முழு ஊரடங்கு வரும் முடிவுக்கு வந்த பிறகு அது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்