தமிழக முதல் அமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2020-04-28 08:24 GMT
சென்னை,

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருகிற மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.  எனினும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது.  இதுவரை தமிழகத்தில் 1,937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  பலி எண்ணிக்கை 24 ஆக உள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.  பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பாதிப்புகளில் இருந்து தமிழகம் விடுபடும் என கூறியுள்ளது.  இதற்கு சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் மற்றும் கைகளை கழுவுதல் உள்ளிட்ட விசயங்களை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த முடிவு செய்து, அதன்படி 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களை அரசு அமைத்துள்ளது.  இந்த குழுக்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.  இந்த ஆலோசனையில், மே 3ந்தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.  ஊரடங்கை கடுமையாக்குவதா? அல்லது தளர்த்துவதா? என்பது பற்றி முக்கிய ஆலோசனையும் நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்