பீதியடைய வேண்டியதில்லை: ‘பூமியில் விண்கல் மோத வாய்ப்பு இல்லை’ - பிர்லா கோளரங்க இயக்குனர் தகவல்

பூமியை இன்று (புதன் கிழமை) கடந்து செல்லும் விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டியதில்லை என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் கூறி உள்ளார்.

Update: 2020-04-28 22:15 GMT
சென்னை, 

‘பூமியின் நீள்வட்டப்பாதையில் பிரமாண்ட விண்கல் ஒன்று இன்று(புதன்கிழமை) பூமியை கடக்க உள்ளது’ இதனால் பூமிக்கு ஆபத்து ஏதாவது ஏற்படலாம் என்று நேற்று தகவல் பரவியது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்தநிலையில் விண்கல் வேறு பூமியை நெருங்குகிறதா? என்ற அச்சம் வேறு பொதுமக்களிடம் தொற்றிக் கொண்டது.

இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது:-

சூரிய குடும்பம் தோன்றிய காலத்தில் இருந்தே இதுபோன்ற பாறை கோள்கள் என்று அழைக்கப்படும் விண்கல்கள் பூமியை நோக்கி வந்து சென்று உள்ளன. இந்த வகை விண்கற்கள் செவ்வாய் கோளுக்கும், வியாழன் கோளுக்கும் நடுவில் சூரியனை சுற்றி வரும். ஒரு சில விண்கற்கள் பூமியின் சுற்றுப் பாதையை கடந்து சூரியனை சுற்றும்.

இவற்றை அப்பல்லோ விண்கல் என்று அழைக்கிறோம்.

ஒரு சில கற்கள் மட்டுமே பூமிக்கு அருகில் செல்லும். அந்தவகையில் இன்று ஒரு சிறிய விண்கல் ஒன்று பூமியை கடக்கிறது. இது பூமியில் இருந்து 63 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் கடந்து செல்கிறது. இந்த விண்கல் பூமியில் மோதுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்