தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை- மருத்துவ நிபுணர் குழு

தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

Update: 2020-04-30 12:03 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்  மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள சூழலில், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை.  தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்த சூழலில்,   ஊரடங்கு  தொடர்பாக , தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி வாயிலாக  ஆலோசனை நடத்தினார். முதல்வர் பழனிசாமியுடனான ஆலோசனைக்குப் பிறகு பேட்டி அளித்த மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் கூறியதாவது:- தமிழகத்தில்  ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை.  

கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும்.எனவே நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.  சமூக இடைவெளி, மாஸ்க் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்த கட்ட முடிவு செய்யப்படும். சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும். ஆனாலும் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்த முடியாது.” என்றார். 

மேலும் செய்திகள்