கோயம்பேடு சந்தையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க தவறியதே கொரோனா நோய் தொற்று பரவலுக்கு அடிப்படை காரணம் - தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கோயம்பேடு சந்தையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதே கொரோனா நோய் தொற்று பரவலுக்கு அடிப்படை காரணம் என்று தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-05-14 23:30 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில் ஏறத்தாழ 50 நாட்களுக்கும் மேலாக, வருமானத்தை இழந்து, வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள், அரசின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே பெருமளவில் நடந்துகொள்கிறார்கள். அரசுதான், திடீர் முடிவுகளால் மக்களைத் திக்கு முக்காட வைத்து, நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. அதுவே நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்பதை மறைப்பதற்காக, ஊரடங்கு விதிகளை மக்கள் கடைப்பிடிக்கவில்லை எனப் பழிபோட முயற்சி செய்கிறார்கள்.

மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து மக்களிடம் உரையாற்றிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு காய்கறிச்சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவியதற்கு, சந்தையை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை எனப் பழியைத் தூக்கி வணிகர்கள் மீது போட்டுள்ளார்.

குழப்பமான அறிவிப்பு

அவசரகதியிலான முழு ஊரடங்கு அறிவிப்பும், அவகாசம் இல்லாத காரணத்தால் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் வணிகர்களும், மக்களும் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு அமலாக்க நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளத் தவறிய அ.தி. மு.க. அரசின் நிர்வாக அலட்சியமுமே நோய்த்தொற்று பரவுதலுக்கு அடிப்படைக் காரணமாகும்.

“3 நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும்” என்று அறிவியல் அடிப்படை ஏதுமின்றி பொய் வாக்குறுதி அளித்த முதல்-அமைச்சர், இப்போது “நோய்த்தொற்று அதிகமாகி, பிறகுதான் இறங்கும்” என்று குழப்பமான அறிவிப்பை வெளியிடுகிறார். கொரோனா குறித்து, தான் வெளியிடும் அறிவிப்புகள், எத்தகைய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அச்சத்தையும், பரபரப்பையும் உருவாக்கும் என்பதைச் சற்றும் எண்ணிப் பார்க்காமலேயே செய்கிறார். தனது முரண்பாடுகளையும், தவறுகளையும் மறைப்பதற்கு வணிகர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பழிபோடுவதை முதல்-அமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வெளிப்படை தன்மை இல்லை

மாவட்ட வாரியாக நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை, நோய்த்தொற்றுக்கான காரணம் ஆகியவற்றை உரிய முறையில் அரசு வெளியிடவேண்டும் என்று பலதரப்பினரும் திரும்பத்திரும்ப எடுத்துச்சொல்லியும், அரசு தரப்பில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத் தன்மை இல்லை. சென்னையில் இருந்துதான் மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா பரவியது எனவும், குறிப்பிட்ட இடம் மக்கள் வணிகர்கள் தொழிலாளர்கள் எனக் குற்றம்சாட்டி, தமிழக மக்களை பேதப்படுத்தி, தேவையற்ற பீதியை உருவாக்குவதை முதல்-அமைச்சர் கைவிடவேண்டும்.

50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கால் உழன்று கொண்டிருக்கும் மக்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்து, அவர்தம் வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும் உற்ற வழி காண்பதைப் பற்றி இனியாவது அவர் சிந்திக்க வேண்டும். உணவுப் பொருள் தட்டுப்பாடு இல்லை என்கிறார் முதல்-அமைச்சர்; ஆனால் தினக் கூலி செய்து பிழைப்பு நடத்துவோர், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள், கையில் வாங்கும் சக்தி இல்லை எனும்போது, தேவையான உணவுப் பொருள்களை எப்படி வாங்கி நுகரமுடியும் என்பதை அறியாதவரா முதல்-அமைச்சர்? அதனால்தான், அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாகத் தர வேண்டும் என்று தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறேன். ஆயிரம் ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல், திசைதிருப்பும் அறிவிப்புகளைத் தவிர்த்துவிட்டு, ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்கிட இப்போதாவது முதல்-அமைச்சர் முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்