முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம்; முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்து உள்ளார்.

Update: 2020-05-16 08:17 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 24ந்தேதி, பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க அ.தி.மு.க. அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இதனால், தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்து, ரூ.3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிடப்படுகிறது என கூறினார்.

இதனை அடுத்து, அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அவர்களுக்கு உரித்தான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.  இதன்படி, கடந்த ஏப்ரல் மற்றும் நடப்பு மே மாதங்களில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு மேற்கூறிய பொருட்கள் மற்றும் நிவாரண பணம் வழங்கப்பட்டது.

இதேபோன்று கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா ரூ.1,000-ம் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வேலையின்றி இருக்கும் தங்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டுமென முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனை ஏற்ற தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கான நிவாரண உதவியை இன்று அறிவித்து உள்ளார்.

இதன்படி, முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  நலவாரிய உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.  நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்யாதவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று நிவாரண தொகையை பெற்று கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்