எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளி வைக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

கொரோனா பரவும் பதற்றமான சூழல் நிலவுவதால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2020-05-18 21:45 GMT
சென்னை, 

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளி வைக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், இதுகுறித்து அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் இரு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை கூறினார்கள். முன்னதாக சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* முன்விரோதத்தின் காரணமாக அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களால், கை கால்கள் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமதுரையை சேர்ந்த ஜெயஸ்ரீயின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தமிழக அரசு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும்.

* வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை செய்துத்தருமாறு மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

* வான்வெளி, விண்வெளி, மின்சாரம், கனிமம் உள்ளிட்ட முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. கொரோனா கால நெருக்கடி சூழலை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

* கொரோனா கால ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் உணவுப்பொருட்கள், மருந்து, மாத்திரைகள், நிதியுதவியை உடனுக்குடன் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து, வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை, பிடிப்பை அவர்களுக்கு ஏற்படுத்திய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

தேர்வை தள்ளி வைக்க வேண்டும்

* கொரோனா வைரஸ் தொற்று பரவலாக உள்ள இந்த பதற்றமான சூழலில் தேர்வறையில் உள்ள மாணவர்களில் யாராவது ஒருவருக்கு தொற்று இருந்தாலும் அது மற்ற மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பரவும் சூழல் உள்ளது. அதனால் ஊரடங்கு முடிந்து அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி திறக்கப்பட்டு 10 முதல் 15 வேலை நாட்கள் பள்ளி இயங்கிய பிறகு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்துவதே சரியான முடிவாக இருக்கும். எனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளையும், ஜூன் 2-ல் நடக்க உள்ள பிளஸ்-2 தேர்வையும், ஜூன் 4-ந் தேதி நடக்க உள்ள 11-ம் வகுப்பு தேர்வையும் தள்ளிவைக்குமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

நேரில் மனு

* கொரோனா கால பதற்ற சூழலில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளிவைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், மாணவரணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ.வும் இணைந்து பள்ளிக் கல்வித்துறையின் செயலாளரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். இதேபோல் இளைஞரணி மற்றும் மாணவரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்