வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் - ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-05-21 08:38 GMT
சென்னை, 

தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கினால் வேலை இழந்து வறுமையில் வாடுவதாகவும், அவர்கள் தங்குவதற்கு சமூக நல கூடங்களின் விவரங்களை அரசு அறிவிக்கவேண்டும் என்றும், சொந்த ஊர் செல்லும் ரெயில் விவரங்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், இந்தி, பீகாரி, ஒடியா போன்ற பிற மொழிகளிலும் வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க பிற மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. பதிவு பெற்ற சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களில், ஒரு லட்சத்து 799 தொழிலாளர்கள் தமிழக அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் செல்ல அரசு மட்டுமல்ல, தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை வருகிற 26-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்