அம்மா, அக்காவுடன் பேச முருகனுக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை? - ஐகோர்ட்டு கேள்வி

அம்மா, அக்காவுடன் பேச முருகனுக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-05-26 23:45 GMT
சென்னை, 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, அவரது கணவர் முருகன் ஆகியோர் வேலூர் சிறையில் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். நளினியின் தாயார் பத்மா (வயது 80) சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “இலங்கையில் உள்ள முருகனின் அம்மாவுடனும், லண்டனில் உள்ள முருகனின் அக்காளுடனும் முருகனும், நளினியும் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘வாட்ஸ் அப் காலில் பேசுவதற்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், ‘அரசு தரப்பில் நாளை (வியாழக்கிழமை) பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அன்றே தீர்ப்பு வழங்கப்படும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்