பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் நல்லெண்ண தூதராக நியமனம் ஐ.நா. அளித்த கவுரவம்

மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டார். ஐ.நா. அமைப்பு இந்த கவுரவத்தை அவருக்கு அளித்துள்ளது.

Update: 2020-06-05 22:45 GMT
மதுரை,

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன். இவர் மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகள் நேத்ரா படிப்பு செலவிற்காக ரூ.5 லட்சத்தை வங்கியில் சேர்த்து வைத்திருந்தார். அந்த பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணமாக வழங்கினார். இதுகுறித்து பிரதமர் மோடி, ‘மான்கீபாத்’ நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டு பாராட்டினார். இதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்த மோகன், கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கியதற்கு காரணம், “எனது மகள் நேத்ராவின் வற்புறுத்தல்தான்” என்றார்.

13 வயதான சிறுமி நேத்ரா 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 9-ம் வகுப்பு செல்கிறார். அண்ணாநகரில் உள்ள புஸ்கோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ஐ.நா.வின் ஒரு அங்கமாக செயல்படும் அமைதி மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு நேத்ராவை வறுமை ஒழிப்புக்கான நல்லெண்ண தூதராக நியமித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதன் மூலம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையில் வறுமை ஒழிப்பு குறித்து பேசுவதற்கான கவுரவம் நேத்ராவிற்கு வழங்கப்படுகிறது. மேலும் அவருக்கு ரூ.1 லட்சம் நிதியும் வழங்கப்படுகிறது.

நேத்ராவிற்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டினார். இதன்தொடர்ச்சியாக கலெக்டர் வினய், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் பாராட்டினர். இதுகுறித்து நேத்ரா கூறியதாவது:-

கொரோனா தாக்கத்தால் தொழில் இன்றி ஏராளாமானோர் பாதிக்கப்பட்டனர். எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் எங்களது வீட்டிற்கு வந்து அழுதனர். இதனால்தான் நான் எனது அப்பாவிடம் படிப்புக்காக வங்கியில் வைத்திருக்கும் பணத்தை எடுத்து உதவி செய்வோம் என்று கூறினேன். அதன்பின் தொடர்ச்சியாக பலருக்கு நிவாரணம் வழங்கினோம்.

இதனையறிந்த பிரதமர் மோடி எங்களை பாராட்டினர். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்த நிலையில் நல்லெண்ண தூதரகாக நியமிக்கப்பட்டுள்ளேன். இதன்மூலம் வறுமை ஒழிப்பு குறித்து ஐ.நா. சபையில் பேசும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்வேன்.

எனது விருப்பம் என்னவென்றால் சாதி, மதம் இல்லா உலகம் உருவாக வேண்டும். அடுத்தது, எல்லோரும் தங்களது ஆடம்பரங்களை குறைத்து கொண்டு ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டதால் எனக்கு ரூ.1 லட்சம் வெகுமதி கொடுத்து இருக்கிறார்கள். அந்த தொகையையும் நல்ல விஷயத்திற்கு செலவழிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்