பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2020-06-09 10:48 GMT
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜூன் 1-ம் தேதி பத்தாம் வகுப்புதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து 9 லட்சம் மாணவர்களின் பாதுகாப்பை கருதி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிகள், ஆசிரியர்கள்,பெற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அதிமுக அரசினை வலியுறுத்தினார்கள்.

கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்திற்கு செல்லும் என்று அரசே அறிவித்தும் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை அழைத்துவரும் பெற்றோர் பாதுகாப்பு குறித்த எவ்வித கவலையும் இல்லாமல் ஜூன் 15-ம் தேதி தேர்வை நடத்துவோம் என்று பிடிவாதமாக மீண்டும் அறிவித்தார்கள். திமுக சார்பிலும், அனைத்துக்கட்சிகளின் சார்பிலும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகும் அதிமுக அரசு தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்துக்கட்சிகளின் சார்பில் 10-06-2020 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இன்று அவரசமாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ள முதலமைச்சர் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என்று அறிவிக்கப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள்,பெற்றோரின் பதற்றத்தையும் மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம்.

தேர்வினை ரத்து செய்ததையும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததையும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் அனைத்துகட்சிகளின் சார்பில் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

அனைத்துக்கட்சிகளின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டிருப்பதால், திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் சார்பில் நாளை 10-06-2020 நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களுக்கும். பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்