கும்பிட்டு கேட்கிறேன் முககவசம் அணியாமல் வெளியே செல்லாதீர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்

வெளியே போகும்போது தயவு செய்து முககவசம் அணியாமல் செல்லாதீர்கள் என்று கும்பிட்டு கேட்டுக்கொள்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-06-16 00:15 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு கடுமையான சூழலை எதிர்க் கொண்டு, நோயை கட்டுப்படுத்தி வருகிறது. அதிகமான சோதனை செய்வதால், அதிகமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கமுடிகிறோம். இதனால் தான் முன்கூட்டியே குணமாக்கமுடிகிறது.

இன்று வரை (நேற்று) 25 ஆயிரத்து 344 பேர் நோய் பாதித்தவர்களை குணமாக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அரசு திணறுகிறது என்ற வார்த்தையை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் தவறானது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு மிக திறமையாக செயல்படுகிறது. பரிசோதனைகள் அதிகமாக செய்தால் தான் நோய் தொற்று இருப்பவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கமுடியும். இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் வருவதை வைத்து அரசியல் செய்யவேண்டாம். எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை. அரசு வெளிப்படையாக இருக்கிறது.

விமர்சனம் வேண்டாம்

சென்னையை பொறுத்தவரை 1 லட்சத்து 85 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதை கண்டுபிடித்து, சரியான சிகிச்சை கொடுத்ததால்தான் இறப்பு விகிதத்தை தமிழக அரசு குறைத்திருக்கிறது. இதைத்தவிர அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். படுக்கைகளை அதிகரித்துக்கொண்டே வருகிறோம். இதில் எதிர்மறையான கருத்துக்கும், விவாதத்துக்கும் இடம் இல்லை. இது அரசியல் செய்வதற்கு களமும் அல்ல, தளமும் அல்ல. சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்கும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனால் எதிலும் தாமதமும், தடையும் இல்லை.

டாக்டர்கள், அதிகாரிகள், போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. நோய் தொற்று ஏற்பட்ட பின்னர், சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் களத்துக்கு சென்று பணியாற்றுகின்றனர். இது பெரிய விஷயம். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தங்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றுபவர்களை பாராட்ட மனம் இல்லை என்றாலும் விமர்சனம் செய்யவேண்டாம்.

முககவசம் அணியுங்கள்

நோயில் வெற்றி என்ன? தோல்வி என்ன?. நோய் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காகவே அதிக பரிசோதனை செய்யப்படுகிறது. மற்றொன்று இறப்பை தவிர்க்கவேண்டும். இதுதான் அரசின் நோக்கம். எனவே எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வெளியில் போகும்போது கட்டாயமாக முககவசம் அணியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்