தனிமை முகாம்களில் தங்குபவர்கள் வசதிக்காக சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு

தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்குபவர்களின் வசதிக்காக சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-22 00:00 GMT
சென்னை, 

கொரோனா நோய் தொற்றை தமிழகத்தில் இருந்து விரட்டியடிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

தனிமைப்படுத்தும் முகாம்களில் அவர்களுக்கு கொடுப்பதற்கான உணவு, இருப்பிட வசதி மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போக்குவரத்து செலவு மற்றும் கொரோனா தொடர்பான செயல்பாடுகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளுக்காக நிதி ஒதுக்குமாறு வருவாய் நிர்வாக கமிஷனருக்கு, திருப்பூர், செங்கல்பட்டு, மதுரை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த வேண்டுகோளை வருவாய் நிர்வாக கமிஷனர் கவனமாக பரிசீலித்து, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தனிமைப்படுத்தும் வசதிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக திருப்பூர், செங்கல்பட்டு, மதுரை, ராணிப்பேட்டை மற்றும் சென்னைக்கு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருப்பூருக்கு ரூ.3 கோடியே 87 லட்சமும், செங்கல்பட்டுக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்து 64 ஆயிரத்து 218, மதுரைக்கு ரூ.93 லட்சத்து 89 ஆயிரம், ராணிப்பேட்டைக்கு ரூ.75 லட்சமும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.16 கோடியே 66 லட்சத்து 53 ஆயிரத்து 218 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தகவல் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்