பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி பரிவர்த்தனை - வருமான வரித்துறை குற்றச்சாட்டுக்கு சசிகலா மறுப்பு

பண மதிப்பிழப்பின் போது ரூ.1,911 கோடிக்கு பரிவர்த்தனை நடந்ததாக கூறப்பட்ட வருமான வரித்துறை குற்றச்சாட்டுக்கு சசிகலா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தன்னிடம் அந்த சமயத்தில் ரூ.48.31 லட்சம் மட்டுமே இருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2020-06-28 23:00 GMT
சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் என 187 இடங்களில் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது, பினாமி பெயரில் ரூ.1,674 கோடிக்கு சசிகலா சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதாகவும், ரூ.237 கோடியை சிலருக்கு கடனாக வழங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட பண மதிப்பிழப்பு காலகட்டத்தின் போது ரூ.1,911 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்ததாக சசிகலா மீது வருமான வரித்துறை குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. இந்தநிலையில், வருமான வரித்துறை இணை இயக்குனர்(புலனாய்வு பிரிவு), துணை இயக்குனருக்கு(பினாமி தடுப்பு சட்டம்) 2019-ம் ஆண்டு மே 14-ந் தேதி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக கூறப்படும் 1,911 கோடி ரூபாய் அவருக்கு சொந்தமானது அல்ல. சில மூன்றாம் நபருக்கு சொந்தமானது. பிற நபர்களின் உடனடி மற்றும் எதிர்கால தேவைக்காக அதை சசிகலா தனது வசம் வைத்திருந்தது தெரியவருகிறது’ என கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் சசிகலாவின் ஆடிட்டர், வருமான வரித்துறை துணை இயக்குனருக்கு கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி அனுப்பிய பதில் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா தன்னிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனது பெயரிலான நிறுவனத்தின் கணக்கில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதிக்கு முன்பாகவே செலுத்தி விட்டார். அந்த சமயத்தில் சசிகலாவின் கைவசம் இருந்த தொகை ரூ.48.31 லட்சம் மட்டுமே ஆகும். வருமான வரித்துறை கூறும் 1,911 கோடி ரூபாயை பொறுத்தமட்டில் சசிகலாவுக்கு சொந்தமானது அல்ல. இந்த பணத்தை பொறுத்தமட்டில் 3-வது நபருக்கு சொந்தமானது. இது, வருமான வரித்துறை இணை இயக்குனர் எழுதிய கடிதம் மூலம் இது நிரூபணம் ஆகிறது.

ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-வது வாரத்தில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அந்த காலகட்டத்தில் சசிகலா மருத்துவமனையிலேயே இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் துக்கம் விசாரிக்க வந்தனர்.

இதன்பின்பு, அ.தி.மு.க. பொதுக்குழு முடிவின்படி, இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்கும் நிலை வந்தது. பண மதிப்பிழப்பு காலகட்டத்தின் போது அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால், அவரால் பினாமி பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பினாமி பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் சசிகலாவின் உத்தரவின் பேரில் மட்டுமே நடந்திருக்க ஏராளமான ஆவணங்கள் இருப்பதாக கூறி சசிகலா தரப்பு விளக்கத்தை ஏற்க வருமான வரித்துறை துணை இயக்குனர் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்