தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-09 07:47 GMT
சென்னை,

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அரபிக்கடல் மத்திய பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்