தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை 10 நாளில் கட்டுப்படுத்த நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழ்நாட்டில் இன்னும் 10 நாட்களில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-07-16 00:15 GMT
கிருஷ்ணகிரி, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது 3-வது மாவட்டமாக கிருஷ்ணகிரியில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்து உள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உபகரணங்கள் தேவையான அளவு வழங்கப்பட்டு உள்ளன. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மூலமாக ரூ.10 ஆயிரம் கோடி அளவில் உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் மாநில அரசின் வாயிலாக ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு கொரோனா நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கொரோனா குணமடைய மருந்துகள் வழங்கப்படுகிறதா?

பதில்:- கொரோனா குணமடைய முழுமையாக இன்னும் மருந்துகள் கண்டுபிடிக் கப்படவில்லை. ஆனாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவை குணப்படுத்திட மாத்திரைகள் பயன்படுத்தி வருகிறோம். கொரோனாவுக்கு இன்னும் எந்த மருந்தும் அதிகாரபூர்வமாக கண்டுபிடித்து கொடுக்கப்படவில்லை.

கேள்வி:- ஆகஸ்டு 15-ந் தேதி கொரோனா தடுப்பு மருந்து வருவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்:- வரும் என்று எதிர்பார்க்கிறோம். நிச்சயமாக வரவேண்டும். இந்த நோய்க்கு இறுதி வடிவம் வேண்டும் என்றால் அதற்கு மருந்து கண்டுபிடித்தால்தான் முடியும்.

மு.க.ஸ்டாலின் கோரிக்கை

கேள்வி:- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?

பதில்:- அவர்கள் எவ்வளவு நிதி கொடுத்து இருக்கிறார்கள். இந்த அரசு நிதி நிலைக்கு ஏற்றவாறு தகுந்த உதவிகளை செய்து வருகிறது. அம்மா உணவகங்கள் மூலமாக 70 லட்சம் பேருக்கு உணவு வழங்கி உள்ளோம். மேலும் எங்களது அ.தி.மு.க. இயக்கம் சார்பிலும் அதிக அளவிலும் நிவாரண பொருட்கள் வழங்கி உள்ளோம்.

தற்போது 100 சதவீதம் தொழில்கள் தொடங்கி உள்ளன. 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகின்றன. தொழிலாளர்கள் பணிக்கு சென்று விட்டனர். அத்தியாவசிய பணிகள் தங்கு தடையின்றி நடக்கின்றன.

10 நாளில் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை

கேள்வி:- எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள்?

பதில்:- எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என தினமும் பத்திரிகைகளில், டி.வி.யில் பார்க்கிறீர்களே. கொரோனா கட்டுப்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம் வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை அதிகமாக செய்த மாநிலம் தமிழ்நாடுதான். அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இன்னும் 10 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்.

கேள்வி:- தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் கள் வருகிறதே?

பதில்:- எந்த கூட்டுறவு வங்கியிலும் நகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்படவில்லை. அது தவறான கருத்து. நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே கடன் வழங்க வேண்டும். அதிகமாக கொடுக்கக்கூடாது என்றுதான் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏனெனில் நிறைய பேர் சொசைட்டியில் டெபாசிட் செய்து உள்ளனர். அதனை திருப்பி கேட்கும் போது சில இடங்களில் கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே குறிப்பிட்ட நிதியை வைத்துக்கொண்டு, மற்ற நிதியை கொடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அங்கு விவசாயிகள்தான் டெபாசிட் செய்து உள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் அவர்கள் டெபாசிட் தொகையை திருப்பி கேட்பதால், வங்கி அலுவலர்கள், தலைவர்கள் அதற்கு ஏற்றார் போல் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கேள்வி:- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ‘ஆன்லைன்‘ கல்விக்கு சில வழிமுறைகளை வகுத்து அறிவித்தது. அதன்படி மழலையர் பள்ளிக்கு அரை மணி நேரம் கல்வி கற்பிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் வகுத்து உள்ளது. அரை மணி நேரம் மட்டுமே பாடம் எடுக்கப்படும் சூழலில் கல்வி கட்டணத்தில் சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- பள்ளி கல்வித்துறை அமைச்சர் மூலம் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கல்வி கட்டணம் தளர்வு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனி சாமி கூறினார்.

மேலும் செய்திகள்