ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-27 10:48 GMT
சென்னை,

மருத்துவ படிப்பில், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 19 சதவீத ஒதுக்கீடு என 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அழுத்தம் கொடுத்தார். பிரதமரும் ஒப்புக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி 9-வது அட்டவணையில் இணைக்கப்பட்டது. இதனால்தான் சமூக நீதி காத்த வீராங்கனை என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாராட்டப்பட்டார்.

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து அதில் நாம் வழக்குத் தொடுத்தோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

தீர்ப்பின்படி குழு அமைத்து 3 மாதத்தில் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை மத்திய அரசு ஏற்று நடக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்