புகைப்பிடித்தல் தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரிய வழக்கு தொடர்பாக, தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2020-07-29 21:26 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில் பொது இடங்களில் எச்சில் துப்புவது, புகைப்பிடிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களை தடுக்கும் தடுப்புச்சட்டத்தை முழுமையாகவும், தீவிரமாகவும் அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பொதுமக்களுக்கு இந்த தடை சட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த சட்டங்களை அரசு அதிகாரிகளும் முழுமையாக அமல்படுத்துவது இல்லை. இதனால், பொதுமக்கள் மத்தியில் வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. வெளிநாடுகளில், இதுபோன்ற சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே, இதுகுறித்து தகுந்த உத்தரவை தமிழக அரசுக்கு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், ‘தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும்’ என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்