இ-பாஸ் முறையை எளிமையாக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2020-08-08 10:54 GMT
சென்னை,

சேலத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு  பணிகள் மற்றும் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, உயர்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

கொரோனா சூழலிலும் வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.  மாநகராட்சிகளிலும் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைய, குறைய தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  டெல்டா பகுதிகளில் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதலாக 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாலங்கள் அமைக்கப்படும். சேலத்தில் சாலை விரிவாக்க பணிகளும் தொடங்கப்பட உள்ளன. கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும். இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்