ஆன்லைன்’ சூதாட்டத்தால் கடன் சுமை: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

‘ஆன்லைன்’ சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக திருச்சியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-08 23:15 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை ஊராட்சி அணலை பெரியார் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் ஆனந்த் (வயது 26). இவர் வாத்தலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பணி முடிந்து ஆனந்த் வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் போலீஸ் சீருடையை மாற்றாமல், தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில், தனது தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை எழுந்து மாட்டு கொட்டகைக்கு சென்ற கோவிந்தராஜ் தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆனந்த் சமீபகாலமாக செல்போன் மூலம் ‘ஆன்லைனில்’ பணம் செலுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இதற்காக தன்னுடன் பணியாற்றும் நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியதும், இவ்வாறு வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியாததால், கடன் சுமை அதிகரித்து மனஉளைச்சலுக்கு ஆளான ஆனந்த் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்